ஞாயிறு, ஏப்ரல் 16, 2006

பத்து ரூபாய் எங்கே...?

ஒருநாள் இரண்டு கிராமத்துவாசிகள் ஒரு மொத்த வியாபாரக்கடையிலிருந்து தலா 300 பழங்கள் வாங்கிக் கொண்டு சில்லரை வியாபாரம் செய்ய சென்றனர். முதலாமவர் ஒரு ரூபாய்க்கு இரண்டு பழங்கள் வீதம் 300 பழங்களை 150 ரூபாய்க்கு விற்றார். இரண்டாமவரோ ஒரு ரூபாய்க்கு மூன்று பழங்கள் வீதம் 300 பழங்களை 100 ரூபாய்க்கு விற்றார். ஆக 600 பழங்கள் 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.



மறுநாள் அவ்விருவரும் அதே போல் மொத்த வியாபாரக்கடையிலிருந்து தலா 300 பழங்கள் வாங்கிக் கொண்டு சில்லரை வியாபாரம் செய்ய சென்றனர். இன்று ஒரு வாடிக்கையாளருக்கு மொத்தமாக 600 பழங்கள் தேவைப்பட்டது. இப்பொழுது இரண்டு பேரிடமும் மொத்தம் 600 பழங்கள் இருப்பதால் இருவரும் கூடி அந்த வாடிக்கையாளரிடம் 600 பழங்களையும் ஒன்றாக விற்று விட முடிவு செய்தனர்.


ஆனால் இருவரும் வேறு வேறு விலைகளில் பழங்களை விற்பதால் அதில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது.
முதலாமவருக்கு விலையை குறைத்து விற்க விருப்பமில்லை. இரண்டாமவருக்கோ விலையை கூட்டி விற்க விருப்பமில்லை. என்ன செய்வது? இருவரும் கூடி ஆலோசித்தனர். முடிவில் அவரவர் விற்கும் விலைக்கே 600 பழங்களையும் விற்பது என்று அதாவது இரண்டு ரூபாய்க்கு 5 பழங்கள் வீதம் விற்பது என்று முடிவு செய்து வாடிக்கையாளரிடம் இரண்டு ரூபாய்க்கு ஐந்து பழங்கள் என்று கூறினர். வாடிக்கையாளரும் சரி என்று கூறி 600 பழங்களை பெற்றுக் கொண்டு 240 ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு சென்று விட்டார். (600/5=120; 120*2=240). இப்பொழுது 100+150=250 என்று கிடைக்க வேண்டிய தொகையில் 10 ரூபாய் குறைகிறது. இருவரும் இப்பொழுது சண்டையிட்டுக் கொண்டு நிற்கிறார்கள்.

உங்களில் யாருக்கேனும் நன்றாக கணக்கு தெரிந்தால் அவர்களின் பிரச்சினையை தீர்த்து வையுங்களேன். உங்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும்.

சனி, ஏப்ரல் 15, 2006

இந்த தடவை ஆபரேஷன் செய்யும் போது...

என் கேரள நண்பர் சொன்ன குட்டிக் கதை.

முன்னாலே ஒருவன் வயிற்று வலியாலே ரொம்ப கஷ்டப் பட்டுக்கிட்டு இருந்தாங்க. அதனால ஒரு டாக்டரைப் போய் பார்த்தான். அப்போ இப்போ மாதிரி ஸ்கேனெல்லாம் இல்லாததாலே டாக்டர் அவனை எக்ஸ்-ரே எடுத்து பார்த்தாரு. அப்புறம் அவன்கிட்டே ஆபரேஷன் செஞ்சாத் தான் சரியாகும் அப்படீன்னு சொல்லிட்டாரு. அவனும் சரின்னு ஆபரேஷன் செஞ்சுக்கிட்டான்.


கொஞ்ச நாளைக்கப்புறம் அவன் திரும்பவும் டாக்டர்கிட்டே வந்து வயிற்று வலி சரியாகலே அப்படீன்னான். அதனாலே டாக்டர் மறுபடியும் எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தாரு. பார்த்தால் எக்ஸ்-ரேலெ ஒரு குச்சி தெரியுது. வயிற்றுக்குள்ளே குச்சி எப்படிப் போகும்ன்னு டாக்டர் யோசிச்சுக்கிட்டே அவனிடம் மறுபடி ஆபரேஷன் செஞ்சுத் தான் அதை எடுக்கணும்டு சொல்லிட்டாரு. அதனாலே அவன் ரெண்டாவது ஆபரேஷனுக்கு ஒத்துக்கிட்டான். ஆனா ஒண்ணு பாருங்க.. ஆபரேஷன் செஞ்சு பார்த்தால் முதல் ஆபரேஷன் செய்யும் போது டாக்டர் மறந்து போன பெரிய ஊசி ஒண்ணு அவன் வயிற்றுக்குள்ளே இருந்துச்சு.

கொஞ்ச நாளைக்கப்புறம் அவன் திரும்பவும் டாக்டர்கிட்டே வந்து இப்பவும் வயிற்று வலி சரியாகலே அப்படீன்னான். இந்த தடவையும் டாக்டர் எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தாரு. பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி. காரணம் எக்ஸ்-ரே ரிசல்ட்லே ஐந்து தலை நாகம் ஒண்ணு தெரிஞ்சசுது. உடனே அவனிடம் வந்து ஆபரேஷன் செஞ்சிருக்கும் போது பாம்பெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு கத்த ஆரம்ப்பிச்சிட்டாரு. ஆனால் அவன் ஐயோ டாக்டர் எனக்கு பாம்பு சாப்பிடும் பழக்கமெல்லாம் கிடையாதுன்னு சொல்லிட்டான். அப்புறம் எப்படி பாம்பு உள்ளே போயிருக்கும்ன்ணு யோசிச்சுக்கிட்டே மூணாவது தடவையா ஆபரேஷன் செஞ்சாரு. ஆணா பாருங்க இவரு ரெண்டாவரு ஆபரேஷன் செஞ்சப்ப மறந்து போன ஹேண்ட் கிளவ்ஸ் உள்ளே இருந்துச்சு.

மூணாவது ஆபரேஷன் செஞ்சுக்கிட்டு வீட்டுக்கு போன அவன் கொஞ்ச நாளையிலேயே திரும்பவும் டாக்டர்கிட்டே வந்து இப்பவும் வயிற்று வலி இருக்குண்ணு சொன்னான். டாக்டர் மிகவும் சலிப்புடன் இன்னும் வயிற்றை வலிக்குதா? மறுபடி எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்போம் என்று சொன்னார். அதற்கு அவன் சரிங்க டாக்டர் எக்ஸ்-ரே எடுத்துப் பாருங்க. அப்புறம் ஆபரேஷன் கூட செய்யுங்க. ஆனா ஒரு கன்டிஷன் அப்படீன்னு நிறுத்தினான். டாக்டரும் என்ன கன்டிஷன்னு கேட்டாரு. அவன் கேஷுவலா என்ன சொன்னான் தெரியுமா?

இந்த தடவை ஆபரேஷன் செய்யும் போது என் வயிற்றுலே ஒரு ஜிப் (zip) பிட் (fit) பண்ணிடுங்க. அப்பத்தான் நமக்கு தேவைப்பட்டப்பல்லாம் ஈஸியா திறந்து மூடிக்கலாம் அப்படீண்ணான்.

இது எப்படீ இருக்கு? நல்ல ஐடியா இல்லீங்களா?