வியாழன், மே 18, 2006

சிக்கலான வழக்கு.

என் நண்பர் ஒரு சிக்கலான வழக்கு ஒன்றைச் சொன்னார். அதை வாசகர்கள் பார்வைக்கு விடுகின்றேன்.

ஒருமுறை அ, ஆ, இ என்ற மூன்று நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது இ-க்கு அ-வோடும் ஆ-வோடும் மிகப் பெரிய சண்டை ஏற்பட்டது. அதனால் அ-வும் ஆ-வும் தனித்தனியாக இ-யை கொன்று விட முடிவு செய்தனர் (அதாவது ஒருவர் செய்த முடிவு மற்றவருக்கு தெரியாது).

அ இ-யை எப்படிக் கொல்வது என்று யோசித்து இ-வுடைய தண்ணீர் பாட்டிலில் விஷத்தைக் கலந்து விட்டான்.

இதை அறியாத ஆ-வோ இ தண்ணீர் இல்லாமல் சாகட்டும் என்று இ-யுடைய தண்ணீர் பாட்டிலை உடைத்து விட்டான். அதனால் தண்ணீர் கிடைக்காமல் இ தாகித்து தாகித்து இறந்து விட்டான்.

வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அ மற்றும் ஆ இருவருமே தங்கள் குற்றத்தை மறைக்காமல் ஒப்புக் கொண்டனர்.
ஆனால் அ-வுடைய வழக்கறிஞரோ என்னதான் அ தண்ணீரில் விஷத்தைக் கலந்திருந்தாலும் அதைக் குடித்து இ இறக்க
வில்லை. தாகித்து தாகித்து தான் இ இறந்தான். அதனால் அ-வை விடுதலை செய்து ஆ-வை தண்டிக்க வேண்டும் என்று
வழக்காடினார்.
ஆனால் ஆ-வின் வழக்கறிஞரோ ஆ தண்ணீர் பாட்டிலை உடைத்திருக்காவிட்டாலும் இ விஷத்தை குடித்து
இறந்திருப்பான். முதலில் விஷத்தைக் கலந்தது அ தான் என்பதாலும் அந்த விஷத்தை குடிக்காமல் இருக்கவே
ஆ-வின் செயல் உதவியது என்பதாலும் ஆ-வை விடுதலை செய்து அ-வை தண்டிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

நீங்கள் ஒரு வழக்கறிஞராயின் இவ்வழக்கை எப்படிக் கொண்டு செல்வீர்கள்? அல்லது நீங்கள் நீதிபதியாயின் என்ன தீர்ப்பு வழங்குவீர்கள்?

செவ்வாய், மே 16, 2006

குடித்துவிட்டு உளறாதே...!

நான் ரசித்த குஷ்வந்த் சிங் ஜோக்குகளில் ஒன்று.

இரண்டு குடிகார நண்பர்கள் நன்றாக குடித்து விட்டு தங்கள் அறைக்குத் திரும்பினர். அறைக்கு வந்தபின் ஒருவன் தன் சட்டையை கழற்றி மாட்டுவதற்க்கு சுவற்றைப் பார்த்தான். ஆனால் அங்கு எந்த ஆணியும் தென்படாததால் அவன் ஒரு ஆணியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வந்தான். வந்தவன் குடிபோதையில் ஆணியை தலைகீழாக வைத்துக் கொண்டு சுவற்றில் அடிக்க ஆரம்பித்தான். மிக நீண்ட முயற்சி செய்தும் ஆணி சுவற்றில் இறங்காததால் என்ன காரணமாக இருக்கும் என்று ஆணியை உற்று கவனித்தான். அப்பொழுது தான் அவனுக்குத் தெரிந்தது ஆணி தலைகீழாக இருப்பது. ஆனால் அவன் என்ன செய்தான் தெரியுமா? தன் மற்றொரு குடிகார நண்பனை அழைத்து "இதோ பாருடா. முட்டாள் பயல்கள். ஆணியின் தலையை கீழே வைத்துத் தயாரித்திருக்கிறார்கள்" என்றுக் கூறினான்.

அதற்கு அவனுடைய நண்பன் "அடப்போடா குடிகாரப் பயலே. குடித்துவிட்டு உளறாதே.
ஆணியைத் தயாரித்ததெல்லாம் சரிதான். ஆனால் அந்த ஆணி எதிர்த்த சுவற்றிற்குரியது"
என்றானே பார்க்கலாம்.

நண்பர்கள் இருவரும் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் அல்லவா?