வியாழன், மே 18, 2006

சிக்கலான வழக்கு.

என் நண்பர் ஒரு சிக்கலான வழக்கு ஒன்றைச் சொன்னார். அதை வாசகர்கள் பார்வைக்கு விடுகின்றேன்.

ஒருமுறை அ, ஆ, இ என்ற மூன்று நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது இ-க்கு அ-வோடும் ஆ-வோடும் மிகப் பெரிய சண்டை ஏற்பட்டது. அதனால் அ-வும் ஆ-வும் தனித்தனியாக இ-யை கொன்று விட முடிவு செய்தனர் (அதாவது ஒருவர் செய்த முடிவு மற்றவருக்கு தெரியாது).

அ இ-யை எப்படிக் கொல்வது என்று யோசித்து இ-வுடைய தண்ணீர் பாட்டிலில் விஷத்தைக் கலந்து விட்டான்.

இதை அறியாத ஆ-வோ இ தண்ணீர் இல்லாமல் சாகட்டும் என்று இ-யுடைய தண்ணீர் பாட்டிலை உடைத்து விட்டான். அதனால் தண்ணீர் கிடைக்காமல் இ தாகித்து தாகித்து இறந்து விட்டான்.

வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அ மற்றும் ஆ இருவருமே தங்கள் குற்றத்தை மறைக்காமல் ஒப்புக் கொண்டனர்.
ஆனால் அ-வுடைய வழக்கறிஞரோ என்னதான் அ தண்ணீரில் விஷத்தைக் கலந்திருந்தாலும் அதைக் குடித்து இ இறக்க
வில்லை. தாகித்து தாகித்து தான் இ இறந்தான். அதனால் அ-வை விடுதலை செய்து ஆ-வை தண்டிக்க வேண்டும் என்று
வழக்காடினார்.
ஆனால் ஆ-வின் வழக்கறிஞரோ ஆ தண்ணீர் பாட்டிலை உடைத்திருக்காவிட்டாலும் இ விஷத்தை குடித்து
இறந்திருப்பான். முதலில் விஷத்தைக் கலந்தது அ தான் என்பதாலும் அந்த விஷத்தை குடிக்காமல் இருக்கவே
ஆ-வின் செயல் உதவியது என்பதாலும் ஆ-வை விடுதலை செய்து அ-வை தண்டிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

நீங்கள் ஒரு வழக்கறிஞராயின் இவ்வழக்கை எப்படிக் கொண்டு செல்வீர்கள்? அல்லது நீங்கள் நீதிபதியாயின் என்ன தீர்ப்பு வழங்குவீர்கள்?

17 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

நம்ம டீ.பி.ஆர் சாரைத்தான் கேட்கணும்.

:-)

PRABHU RAJADURAI சொன்னது…

அப்படியொன்றும் மிகவும் சிக்கலான வழக்கு அல்ல. 'அ'வின் குற்றம் கொலை முயற்சி. கொலை செய்ய மனதில் எண்ணம் கொள்வது குற்றமல்ல. ஆனால் அதற்கான ஒரு முயற்சியை அவர் மேற்கொண்டாலே அது குற்றமாகும், அவர் அந்த முயற்சியில் வெற்றியடையாவிட்டாலும் கூட. எனவே அவர் தண்டிக்கப்படுவார். 'ஆ'வின் செயல் கொலை, தண்ணீர் பாட்டிலை உடைத்து ஒருவரை கொலை செய்வது சாத்தியமென்றால்.

இது போன்ற வழக்குகள் பல உண்டு. 'அ' ஆவை கொலை செய்யும் எண்ணத்துடன் துப்பாக்கியால் சுடுகிறார். குண்டு தவறி 'இ'யின் மீது பாய 'இ' இறக்கிறார். இங்கு 'அ' இரண்டு குற்றம் புரிந்துள்ளார். 'ஆ'வை கொலை செய்யும் முயற்சி மற்றும் 'இ'யினை கொலை செய்தது. அதாவது ''யினை அவர் செய்தது 'திட்டமிட்ட கொலை'யாகாது (murder) ஆனாலும் கொலை (manslaugter). இரண்டாம் வகைக்கு தண்டனை குறைவு.

பெயரில்லா சொன்னது…

இருவருடைய செயல்களும் மரணத்தை விளைவிப்பவையாக இருந்தாலும், எது கொடுமையான மரணமென்பது கேள்வி. தாகத்தில் இறப்பதே மிகக்கொடுமை.

இராஜகிரியார் சொன்னது…

பிரபு ராஜதுரை அவர்களே,
அ இ-யை கொலை செய்ய முயற்சித்து அதில் அவர் வெற்றி பெற வில்லை என்றால் மட்டுமே அதாவது இ இறக்க வில்லை என்றால் மட்டுமே அது கொலை முயற்சி ஆகும். ஆனால் இங்கு இ இறந்து விடுகிறார். அவ்வாறிருக்கும் போது அது
எவ்வாறு கொலை முயற்சி ஆகும்? ஆனால் நீங்கள் கேட்கலாம் ஆ தண்ணீர் பாட்டிலை உடைத்ததால் தானே இ இறந்நதார் என்று. ஆனால் ஆ பாட்டிலை உடைத்திருக்கா விட்டாலும் இ நிச்சயமாக விஷத்தை குடித்து இறந்திருப்பார். அவ்வாறாயின் அ செய்தது திட்டமிட்ட கொலை தானே?

நீங்கள் கூறியது உதாரணத்தை வைத்துக் கொண்டாலும் அ ஆ-வை சுடும் போது குண்டு தவறி இ இறந்து விடுகிறார். ஆனால் ஆ-வோ தப்பித்துக் கொள்கிறார். இவ்வாறிருந்தால் மட்டுமே இதை கொலை முயற்சியாக கூற முடியும்.
ஆனால் அந்த வழக்கிலோ இ இறந்து விடுகிறார். ஆ தண்ணீர் பாட்டிலை உடைக்காமல் இருந்தாலும் இ இறந்திருப்பார். இன்னும் சொல்லப் போனால் ஆ-வின் செயல் இ-யின் மரணத்தை சற்றே தள்ளிப் போட்டுள்ளது. அவ்வாறாயின் அ தானேதண்டிக்கப் பட வேண்டியவர்?

அனானி அவர்களே. கேள்வி யார் குற்றவாளி என்பது தான். ஒருவேளை இ விஷத்தை குடித்து இறந்திருந்தால்-அது கொடுமையான மரணம் இல்லை என்பதால் அ-வை விட்டுவிட முடியுமா என்ன?

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

இ.பி.கோ 304 படி அ வும்,
இ.பி.கோ 302 read with 40(சதி) படி
மற்றவரும் தண்டனைக்கு உரியவர்கள்

(பாபநாசத்திற்கும்
பண்டாரவாடைக்கும்
இடைப்பட்ட ஊரில்
தண்டனைவழங்கப்பட
வேண்டும்)

இராஜகிரியார் சொன்னது…

ஹலோ சிவஞானம்ஜி,

எனக்கு இந்த சட்டப்பிரிவெல்லாம் தெரியாது என்று தெரிந்துக் கொண்டு இந்த மாதிரி 302, 304 என்றெல்லாம் சொல்லி ஏமாற்றக் கூடாது.

(அந்த அ-வோ அல்லது ஆ-வோ சத்தியமா நான் இல்லீங்கோ)

hosuronline.com சொன்னது…

கொலை செய்ய நினைத்ததே குற்றம் தான். ஆகவே இருவருமே தண்டனைக்ள்ளாக வேண்டிய குற்றவளிகள் தான்.

அண்புடன்

www.HosurOnline.Com

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

இ.பி.கோ 302 கொலை
40 சதித்திட்டம்
304 கொலை முயற்சி
விடுமுறையில் ஊருக்கு வரும்பொழுது குடமுருட்டி பாலத்தில்
உட்கார்ந்து யோசிங்க. அல்லது காசிமியா ஸ்கூல் க்ரவுண்ட் லெ உட்காந்து யோசிங்க

இராஜகிரியார் சொன்னது…

வருகைத் தந்த நாமக்கல் சிபி, பிரபு ராஜதுரை, சிவஞானம்ஜி, HosurOnline மற்றும் அனானி சகோதரர் அனைவருக்கும் மிக்க நன்றி.

ஐயா சிவஞானம்ஜி அவர்களே, நீங்கள் சொன்னபடி யோசித்து விட்டு தங்களுக்கு பதில் தருகிறேன்.

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

அட! ஊர்க்காரன் என்ற்த வெளிக்காட்ட மாட்டியளோ

இராஜகிரியார் சொன்னது…

திரு. சிவஞானம்ஜி அவர்களே, அது தான் இரா......ஜகிரியார் என்று தெளிவாக சொல்லி இருக்கின்றேனே. அப்புறம் என்ன?

இன்னுமோர் விஷயம். நீங்கள் சொன்னபடி குடமுருட்டி பாலத்தில் உட்கார்ந்து யோசிக்கப் போனேன். ஆனால் குடமுருட்டி ஆறு மற்றும் எழில் கொஞ்சும் அதன் கரை அழகிலும், இன்னும் ஆர்ப்பரிக்கும் கடல் அலையைப் போன்ற அதன் இரைச்சலிலும் அப்படியே மெய்மறந்து போய் விட்டேனய்யா. மேலும் சிறு வயது பசுமையான ஞாபகங்கள் (பள்ளிக் கூடத்துக்கு கட் அடித்து விட்டு ஆற்றங்கரையில் சுற்றிக் கொண்டிருந்ததையும் சேர்த்து தான் சொல்கிறேன்) தாலாட்ட ஆரம்பித்து விட்டதுங்க. இதிலெ எங்கேங்க நான் யோசிக்கிறது? சரி இங்கே தான் யோசிக்க முடியலை என்று இராஜகிரியிலிருந்து தனி ஆறாக பிறப்பெடுக்கும் திருமலைராஜன் ஆற்றுப் பாலத்துக்காவது செல்லலாம் என்று சென்றால் அங்கேயும் அதே கதை தானுங்க.

சரின்னு இதையெல்லாம் விட்டுட்டு காசிமியா ஸ்கூல் க்ரவ்ண்டுக்கு வந்தால் (யோசிக்கத் தாங்க) ஆறாவது படிக்கும் போது செய்த சிறு தவறுக்காக நம்ம C.R. சார் என் தலையிலே பொத்தென்று தன் இரும்புக் கையால் (NCC உபயமாக இருக்கும்) அடித்த போது அப்படியே தலை சுற்ற ஆரம்பித்தது - இல்லை இல்லை இந்த உலகமே என்னை சுற்ற ஆரம்பித்தது தானுங்கோ ஞாபகத்திற்கு வருது. அதிலெ கலங்குன மூளை தாங்க இன்னும் உங்களையும் சேர்த்து குழப்பிக்கிட்டு இருக்கிறேன். இதுலெ எங்கங்க நான் உங்கள் சட்டப் பிரிவைப் பற்றி யோசிக்கிறது?

இருந்தாலும் பரவாயில்லை என்று மெயின் ரோட்டுல போற வர்ற ஆட்களையும் பஸ் கார் ஆட்டோக்களையும் பார்த்துக் கொண்டே யோசிச்சா நான் ஏற்கனவே பிரபு ராஜதுரைக்கு அளித்த பதில் தானுங்க வருது. நீங்க வேணும்னா அப்படியே காலாற நடந்து வந்து குடமுருட்டி பாலத்திலோ அல்லது காசிமியா ஸ்கூல் க்ரவ்ண்ட்லேயோ உட்கார்ந்து யோசிச்சு சொல்லுங்களேன்.

அதெல்லாம் சரி. நான் ஏற்கனவே இங்கு கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லையே...!

பெயரில்லா சொன்னது…

புண்ணாக்கு வழக்கு. அவனவனுக்கு யானைக்கு பட்டையடிக்கிறதா, நாமம் சாத்துறாதான்னு லோகத்துல அவஸ்யமான விஷயம் நெறைய இருக்கச்சே இதப் பத்தி பதிவு போட்டு வெறுப்பேத்துறேள்.... ஷேமமா இருங்கோ.... வர்ட்டா...

காரமடை கருவாயன்

SUMAZLA/சுமஜ்லா சொன்னது…

www.rajagiyar.tk மூலம் உள் நுழைந்தேன்.

விஷம் கலந்தவன் தான் குற்றவாளி. இவன் தேடி அலைந்து கூட தண்ணீர் குடித்திருக்கக்கூடும்.

அதோடு, கை தவறி கூட தண்ணீர் பாட்டில் உடையும்(இங்கு அப்படி நடக்கவில்லை என்றாலும்). ஆனால், கைதவறி விஷம் கலக்க முடியாது.

இராஜகிரியார் சொன்னது…

தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுகைனா. தங்கள் வலைப்பதிவினை தொடர்ந்து வாசித்து வருபவன் நான். அதனால் தான் என்னுடைய rajagiriyar.blogspot.com கூட www.rajagiriyar.tk ஆக சுருங்கி விட்டது. இங்கே அதற்கான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

suvanappiriyan சொன்னது…

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா சொன்னது…

வழக்குப்பதிவு வழக்காடுகிறது வலைதளத்தின் வழியே..

பதிவு அருமை..
பாராட்டுகள்..

முதல்முறை உங்கள் தளம் வந்து செல்கிறேன் இனி நேரம்கிடைக்கும்போது வந்துசெல்வேன் ..

இராஜகிரியார் சொன்னது…

வாருங்கள் சகோதரியே.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

மிகவும் ஆரம்ப கால பதிவராக இருந்த நான் நேரம் ஒதுக்க முடியாததால் எழுதுவதை நிறுத்தி விட்டேன். இருப்பினும் தங்களை போன்ற நல்லுங்களின் ஊக்கமளிப்பு மீண்டும் எழுத துாண்டுகிறது.

பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்...!