திங்கள், மார்ச் 27, 2006

வளைகுடாவில் தொலைந்தவனே..

என்னைத் தொட்ட கவிதைகளில் ஒன்று. காரணம் வளைகுடா அனுபவமோ என்னவோ...
அதை வாசகர்களில் பார்வைக்காக இங்கு தருகிறேன்.




இளமையின் சுமை
அறியாதவனா நீ..?
கரைபுரளும்
என் கண்ணீரின்
கதை தெரியாதவனா நீ..?
சுகங்களின் முகவரியை
எனக்குச் சொல்லிக் கொடுத்தவனே..
பிறகு ஏன்
தனிமையில் என்னை கிடத்தி
கடல் கடந்து
யாரை கெளரவப்படுத்தப் போயிருக்கிறாய்..??
எதை பெறுவதற்காக
என்னை இழந்துக் கொண்டிருக்கிறாய்..??
வற்றிவிடும் இளமை வராது திரும்பவும்..
வளைகுடா மறந்து வா சீக்கிரம்..!!
இந்த முறையாவது
என் வயிற்று வலியையும் வாந்தியையும்
வாங்கிக் கொள்ள என் பக்கத்தில் நீயிரு..!!

--அபிரேகா அலாவுதீன்

நன்றி: வழுத்தூர்.காம்

சனி, மார்ச் 25, 2006

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்...

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாகவே வளருமா? எங்கே செய்து பாருங்கள். வளர்கிறதா என்று பார்ப்போம்.

நாம் தவறாக விளங்கி வைத்திருக்கும் சில பழமொழிகளில் இதுவும் ஒன்று. என்ன ஒரு சமாதானம். என்ன தான் தவறாக விளங்கி வைத்திருந்தாலும் இந்த பழமொழியைப் பொறுத்தவரை நல்லவிதத்தில் பொது நலச் சிந்தனையோடு தான் விளங்கி வைத்திருக்கிறோம். நாம் விளங்கி வைத்திருப்பது போன்று என்னதான் ஊரில் உள்ள பிள்ளைகளையெல்லாம் ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் தன் பிள்ளைகளையும் அன்போடும், பாசத்தோடும் அரவணைத்து ஊட்டி வளர்த்தால் தான் வளரும். அப்படியானால் இந்த பழமொழி எதைத் தான் சொல்ல வருகிறது?

முதலில் நாம் ஒன்றை சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். என்னதான் தன்னுடைய பிள்ளையாக இருந்தாலும் பிள்ளையைப் பெற்றெடுப்பதென்னவோ மனைவி தான்.

இப்பொழுது மனைவி என்பவளும் ஊரில் உள்ள யாரோ ஒருவரின் பிள்ளைதான் இல்லையா?

தன் பிள்ளையை வயிற்றில் சுமந்திருக்கும் ஊரான் பிள்ளையாகிய தன் மனைவியை அவள் கருவுற்றிருக்கும் போது ஊட்டி ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது தான் இதன் கருத்து.

இவற்றைப் போல் தவறாக விளங்கப் பட்ட இன்னும் சில பழமொழிகளும் தமிழில் உள்ளன. அவற்றிற்கான பொருள்களை யாராவது தெரிந்தவர் இருந்தால் - அவற்றிற்கு விளக்கமளித்தால் மிகவும் பயனாக இருக்கும்.

செவ்வாய், மார்ச் 21, 2006

விருந்துக்கும் பந்திக்கும் என்ன வேறுபாடு?

ஒரு முறை வலைப்பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு வலைப் பதிவின் தமிழ் இலக்கணம் கசக்குமா? என்ற பதிவின் பின்னூட்டத்தில் யாரோ ஒரு சகோதரர் விருந்துக்கும் பந்திக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டிருந்தார். இது சம்பந்தமாக ஒரு பதிவு எழுதி அதை அந்த பதிவிற்கு இணைப்பு கொடுக்கலாம் என்று நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் என்னால் அந்த பதிவை கண்டு பிடிக்க முடியவில்லை. யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து இதை அந்த சகோதரருக்கு தெரியப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பந்திக்கு முந்திக்கொள். படைக்குப் பிந்திக்கொள். இந்த பழமொழியைக் கேட்டிருக்காதவர் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பிரபலமானது. இதன் அர்த்தம் சாப்பாட்டிற்கு முந்திக் கொள் - ஏதாவது சண்டை பிரச்சினை என்றால் ஓடி ஒளிந்துக் கொள் என்பது தானே. அப்படி அல்ல. தமிழில் அழகான, கருத்துச் செறிவுள்ள பல பழமொழிகள் இருந்தாலும் அவற்றில் சிலவற்றிற்க்கு நாம் தவறான அர்த்தத்தையே விளங்கி வைத்திருக்கிறோம். அப்படிப் பட்ட சில பழமொழிகளில் ஒன்று தான் இதுவும்.

முன்னர் முடியாட்சிக் காலத்தில் ஒவ்வொரு நாடும் தனது நாட்டைக் காக்க நான்கு வகைப் படைகளைக் கொண்டிருந்ததை நாமெல்லாம் அறிவோம். அவை 1. காலாட் படை, 2. குதிரைப் படை, 3. யானைப் படை மற்றும் 4. தேர்ப் படை ஆகியவை. இதுவும் நாம் அறிந்ததே. ஆனால் நம்மில் பலர் அறியாத ஐந்தாவது படை ஒன்றும் இருந்தது. அந்த ஐந்தாவது படையில் மொத்தம் ஏழு (எத்தனை என்று சரியாக நினைவில்லை) வரிசைகள் (ஆங்கிலத்தில் Line அல்ல. Batch என்று சொல்லலாமா?) இருந்தன. அந்த வரிசைகளுக்கு பந்திகள் என்றுப் பெயர்.

ஒரு நாட்டின் இராணுவ பலத்திற்கு படை வீரர்களின் எண்ணிக்கையும் மிக முக்கியமானது. அதற்காக நாட்டில் உள்ள அனைத்து ஆண்களும் இராணுவத்தில் சேர்ந்து விட்டால் நாட்டின் விவசாயம் போன்ற வளர்ச்சிப் பணிகளில் யார் ஈடு படுவது? அதனால் முறையான பயிற்சி பெற்ற ஒரு பிரிவினர் நான்கு படைகளிலும் மற்றொரு பிரிவினர் அதாவது சரதாரண குடிமக்கள் நாட்டின் வளர்ச்சிப் பணிகளிலும் ஈடு பட்டிருந்தனர். இந்த இரண்டாவது பிரிவினர் நாட்டிற்கு ஆபத்தான கட்டத்தில் மட்டும் போர்களில் ஈடுபடுவார்கள்.

இதில் நாட்டு மக்களால் சிறப்பாக கருதப் பட்டது எதுவென்றால் ஐந்தாவது படையின் முதல் பந்தித் தான். இதன் காரணம் மக்கள் உழைப்பிற்கு கொடுத்த முக்கியத்துவமே. அதே சமயம் இதை காரணம் காட்டி கோழையாக இருக்கக் கூடாது என்பதற்காக ஐந்தாவது படையின் முதல் பந்திக்கு முந்திக் கொள்ள வலியுறுத்தவே பந்திக்கு முந்திக்கொள். படைக்குப் பிந்திக்கொள் என்ற பழமொழி ஏற்பட்டது.

இந்த பழமொழியில் வரும் பந்தி என்ற தூய தமிழ் வார்த்தையைத் தான் நாம் விருந்து நடக்கும் போது நடை பெறும் வரிசையை (Batch)குறிக்க அதாவது முதல் பந்தி இரண்டாவது பந்தி என்று சொல்லுவதற்கு பயன் படுத்துகிறோம். இன்றளவும் முஸ்லிம்களின் வீடுகளில் நடக்கும் விருந்துகளில் எத்தனையாவது பந்தி நடக்கிறது என்று கேட்பதை நாம் கேட்டிருப்போம். அதே போல் நாம் விருந்துக்கு போகிறோம் என்று தான் கூறுவோம். மாற்றிக் கூறுவதில்லை. ஆக விருந்து என்பது வேறு. பந்தி என்பது வேறு.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்னை தானே வளரும். இந்த பழமொழியின் விளக்கம் தெரியுமா? இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில்.

திங்கள், மார்ச் 20, 2006

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய யாவற்றின் மீதும் பேராற்றலுடைய அல்லாஹ்வின் திருப் பெயரைக் கொண்டு துவங்குகிறேன்.

இது என் முதல் வலைப் பதிவு. இவ்வலைப்பதிவு முற்றிலும் ஜாதி, இன, மத, மொழி மற்றும் தேசீயத்திற்கு அப்பாற்பட்ட மிக மிக பொதுவானது. இதில் நான் எனக்கு தெரிந்ததில் சிலவற்றை பதியவிருக்கிறேன். அவை சரியாக இருந்தால் அன்போடு ஊக்கப் படுத்துங்கள். குறை இருந்தால் அக்கறையோடு திருத்துங்கள். பணிவோடு திருத்திக் கொள்கிறேன். நாம் அனைவரும் மனித நேயத்தோடும் சகோதரத்துவத்துவத்தோடும் ஒற்றுமையோடும் நலமாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக.

அன்புடன்,
இராஜகிரியார்.
20-03-2006.