ஞாயிறு, ஏப்ரல் 16, 2006

பத்து ரூபாய் எங்கே...?

ஒருநாள் இரண்டு கிராமத்துவாசிகள் ஒரு மொத்த வியாபாரக்கடையிலிருந்து தலா 300 பழங்கள் வாங்கிக் கொண்டு சில்லரை வியாபாரம் செய்ய சென்றனர். முதலாமவர் ஒரு ரூபாய்க்கு இரண்டு பழங்கள் வீதம் 300 பழங்களை 150 ரூபாய்க்கு விற்றார். இரண்டாமவரோ ஒரு ரூபாய்க்கு மூன்று பழங்கள் வீதம் 300 பழங்களை 100 ரூபாய்க்கு விற்றார். ஆக 600 பழங்கள் 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.



மறுநாள் அவ்விருவரும் அதே போல் மொத்த வியாபாரக்கடையிலிருந்து தலா 300 பழங்கள் வாங்கிக் கொண்டு சில்லரை வியாபாரம் செய்ய சென்றனர். இன்று ஒரு வாடிக்கையாளருக்கு மொத்தமாக 600 பழங்கள் தேவைப்பட்டது. இப்பொழுது இரண்டு பேரிடமும் மொத்தம் 600 பழங்கள் இருப்பதால் இருவரும் கூடி அந்த வாடிக்கையாளரிடம் 600 பழங்களையும் ஒன்றாக விற்று விட முடிவு செய்தனர்.


ஆனால் இருவரும் வேறு வேறு விலைகளில் பழங்களை விற்பதால் அதில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது.
முதலாமவருக்கு விலையை குறைத்து விற்க விருப்பமில்லை. இரண்டாமவருக்கோ விலையை கூட்டி விற்க விருப்பமில்லை. என்ன செய்வது? இருவரும் கூடி ஆலோசித்தனர். முடிவில் அவரவர் விற்கும் விலைக்கே 600 பழங்களையும் விற்பது என்று அதாவது இரண்டு ரூபாய்க்கு 5 பழங்கள் வீதம் விற்பது என்று முடிவு செய்து வாடிக்கையாளரிடம் இரண்டு ரூபாய்க்கு ஐந்து பழங்கள் என்று கூறினர். வாடிக்கையாளரும் சரி என்று கூறி 600 பழங்களை பெற்றுக் கொண்டு 240 ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு சென்று விட்டார். (600/5=120; 120*2=240). இப்பொழுது 100+150=250 என்று கிடைக்க வேண்டிய தொகையில் 10 ரூபாய் குறைகிறது. இருவரும் இப்பொழுது சண்டையிட்டுக் கொண்டு நிற்கிறார்கள்.

உங்களில் யாருக்கேனும் நன்றாக கணக்கு தெரிந்தால் அவர்களின் பிரச்சினையை தீர்த்து வையுங்களேன். உங்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும்.

3 கருத்துகள்:

RS சொன்னது…

இருவரும் சேர்ந்து 120 (600/5) கூறுகள் விற்றுள்ளனர். ஆனால், இரண்டாமரின் இருப்பு 100 கூறுகளுக்கு மட்டுமே (100*3) போதுமானதாக இருக்கும். மீதம் 20 கூறுகள் முதலாமவரின் இருப்பிலிருந்து சரிகட்டப்பட்டது. அதாவது, முதலாமவர் 100 பழங்களை ((2+3)*20) தான் வழக்கமாக விற்கும் 50 பைசாவிலிருந்து குறைத்து 40 (240/600) பைசாக்களுக்கு விற்றுள்ளார், எனவே முதலாமவர்க்கு நஷ்டம் 10 ரூபாய் (100*0.10).

இராஜகிரியார் சொன்னது…

மிகச் சரியான விடையை சொல்லி விட்டீர்களே. நீங்கள் கணக்கில் புலி தான் போங்கள். இந்த கணக்கை இன்னும் சுலபமாக புரிந்துக் கொள்ள இன்னொரு வழியும் உள்ளது. அதாவது அனைத்து எண்களையும் 10 ஆல் வகுத்துக் கொண்டால் அதாவது 30, 30 பழங்கள் என்று கணக்கிட்டால்
இன்னும் எளிதாக விடை கண்டுபிடித்து விடலாம். வருகை தந்தமைக்கும் சரியான விடை சொன்னதற்க்கும் மிக்க நன்றி சுந்தர் ராம்ஸ் அவர்களே.

Chellamuthu Kuppusamy சொன்னது…

நன்றாக இருக்கிறது. இது போன்ற நிறைய வாய் மொழியாக சொல்லப்பட்டாலும், இணையத்திலே அதிகம் பார்க்க முடிவதில்லை. தொடர்ந்து அளித்து வாருங்கள். நன்றிகள்.

- குப்புசாமி செல்லமுத்து